Tuesday, December 18, 2007

சமர்த்து ! (சிறுகதை)

ரஞ்சனியின் வீடு, பெண்பார்க்கும் படலத்தால் களைகட்டியிருந்தது,

"எங்களுக்கும், பையனுக்கும், பொண்ண புடிச்சிபோயிடுத்து மத்த விசயங்களையும், என்னான்னு கேட்டுட்டேள்னா, மேல ஆக வேண்டியத பாத்து, முகூர்த்தத்துக்கு தேதி குறிச்சிடலாம்" என்றாள் ரஞ்சனியை பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையின் அம்மா.

"ப்பேஷ் சொல்லுங்கோ, எங்களுக்கு இவ இரண்டாவது பொண்ணு, இவளுக்கு எல்லாம் நன்னா செஞ்சு பார்க்கனும் எங்களுக்கும் ஆசைதான்" என்றேன்

மாப்பிள்ளையின் அம்மா மெதுவாக ஆரம்பித்தாள்,

"இங்க பாருங்கோ சம்பந்தி, என்ன அதுக்குள்ள சம்பந்தின்னு கூப்பிடராளேன்னு தப்பா நினெச்சிடாதேள், நாங்க விஜாரிச்சதில, உங்க ஆத்தப்பத்தி எல்லோரும் நன்னாதான் அபிப்ராயம் சொல்றா ..."

நானும் அமைதியாக ஆமோதித்து,

"எங்க முப்பாட்டனார், தோப்பனார் வரைக்கும் ஐஸ்வரியமா வாழ்ந்தவா தான் எங்க பேமிலி, எங்க தோப்பனார் பேரச்சொல்றச்ச, கேட்கிறவா கையெடுத்து கும்பிடுவா, இப்பதான் கொஞ்சம் நொடுச்சி போய்டோம், ஆனா பொண்ண டிகிரி வரைக்கும் படிக்கவெச்சிருக்கோம்" என்றேன்

மாப்பிள்ளையின் அம்மா உடனே,

"அதெல்லாம் நேக்கு நன்னா தெரியும், எங்காத்துக்குன்னு பாரம்பர்யம், கவுரவம் எல்லாம் இருக்கு..."

"அந்த காலத்தில நான் மாட்டுப் பொண்ணா போறச்ச என் தோப்பனார் நூறு சவரனுக்கு குறையாமல் செஞ்சார்..."

"நாங்க அவ்வளவெல்லாம் கேட்கல, ஒரு ஐம்பது சவரனும் நகையும், பையனுக்கு மாருதிக்காரும், கொஞ்சம் வெள்ளிப்பாத்திரமும் வாங்கிக் கொடுத்திட்டேள்னா போதும்..."

சம்பந்தி அம்மாதான் எல்லாவற்றையும் பேசினாள், அவ ஆம்படையான் எல்லாத்தையும் ஆமோதிப்போல் தலையாட்டி கொண்டிருந்தார், கூட்டிக் கழித்துப் பேசுவதை அவர்கள் விரும்பவும் இல்லை. முடிவாக,

"அப்ப நாங்க வர்ரோம், ஒருவாரத்துக்குள்ள, சட்டுன்னு தரகர்கிட்ட உங்க முடிவ சொல்லி அனுப்புங்க"
என்று எழுந்து சென்றார்கள் மாப்பிள்ளை ஆத்துக்காரார்கள்.

"ஏண்ணா, என்ன சொல்லப்போறேள், அவா பாட்டுக்கு நெறையா நீட்டிண்டே போனாளே" என்றாள் என் மனைவி ருக்கு

"மாப்ள ஆத்துக்காரவா, அப்படிதான் கேட்பா..." என்ற நான்,

"எதுக்கும், நம்ப பொண்ணு ரஞ்சனிக்கிட்ட ஒருவார்த்தை கேட்டுடலாம், அவ என்ன சொல்லப் போறாளோ" என்று சொல்லிவிட்டு

"ரஞ்சனி இங்க வாடி" என்று கூப்பிட்டேன்

"கொஞ்சம் இருங்கோ, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுரேன்..."

"இதோ வந்துட்டேன் ப்பா, ம்.. சொல்லுங்கப்பா"

"ஏன்டி, நோக்கு இந்த வரணை புடிச்சிருக்கா ?"

"நேக்கு புடிச்சிருக்குப்பா"

"ஏன்டி, நோக்கு தெரியுமோன்னோ, அவா வரதட்சணை விசயத்தில ரொம்ம கராறா இருக்கா" என்றாள் ருக்கு

"அவள விடேண்டி, அவதான் புடிச்சுருக்குன்னு சொல்றாள்ளே, இந்த வரனையே முடிச்சிட்டா போறது" என்றேன்

"ரஞ்சனி, அவா கேட்டது, நேக்கு ரொம்ம அதிகம்னு பட்றது, அப்பறம் உன்பாடு, உன் தோப்பனார் பாடு" என்றாள் ருக்கு

"அம்மா, அப்பாதான் அவா பேமிலி போக்ரவுன்ட நன்னா விசாரிச்சிட்டுதானே, வந்து பாக்க சொன்னார்"

ரஞ்சனி புத்திசாலி, எதையும் விட்டுக் கொடுக்காதவ, எப்பவும் தெளிவா முடிவெடுப்பாள், மூத்தவளைவிட சாமார்த்தியசாலி, சம்பந்தியம்மா விடாப்பிடியாக வரதட்சணை பேசியது தெரிந்தும் இவள் இந்த வரனையே முடிச்சிடலாம்னு சொன்னது, எனக்கு மட்டும் ஆச்சர்யமாக இருந்தது

"ஏண்டி அவா பேசுனத வச்சி அவா மேல உனக்கு தப்பானா அபிப்ராயம் வந்துடலையா?, நிஜமா சொல்லு அவாள நோக்கு பிடிச்சிருக்கா"

"அப்பா, நன்னா யோசிச்சிதான், நான் முடிவு பண்ணினேன் ..." மேலும் தயக்கமாக,

"அப்பா, நீங்க ஒரு விசயத்தை மறந்திட்டேள், விஜி அக்காவோட அத்திம்பேர் ஆத்தவா, சீர் எதுவும் செய்யவேண்டாம்னு பெரும்தன்மையா விஜியை கட்டிண்டு போனாளே கடைசியல என்னாச்சு"

"ஆமாண்டி, அதை ஏன் சொல்லற ? நான் அப்படி ஒன்னும் வெறும்கையா கட்டிக் கொடுக்கலையே ஓரளவுக்கு நம்ப விஜிக்கு போட்டுதானே அனுப்பினேன்" என்றேன் நான்

"அப்படியும் பின்னாடி, அவா உங்கள விட்டாள ? அத்திம்பேருக்கு பிஸ்னஸ்ல நஷ்டம் ஆனச்ச, அவ மாமியார், நம்ப விஜி வெறும் கையோடு வந்தாள்னு குத்தி குத்தி காமிச்சாளா இல்லையா? "

"ஆமாண்டி, விஜி கண்ண கசக்கிண்டு வந்து நின்னா"

"என் ஆத்துக்காரர் கஷ்டப்படுறார்'னு அவ நம்ம ஆத்தில இரண்டு மாசம் தங்கிட்டா, அப்புறம் உங்க ரிடையர் பணத்தை தொடச்சி, ஐஞ்சு லட்சம் கொடுத்தேளே மறந்திட்டேளா ..." மேலும் தெளிவாக சொன்னாள்,

"ஒன்னும் வேணான்னு சொல்லிண்டு, பின்னாடி பிடுங்கிறவாள விட, இவா நேரடியா கேட்டது நல்லதுன்னு நேக்கு படறது..."

"ஏன்டி, ரஞ்சனி அவா கேட்டதெல்லாம் செய்யறத்துக்கு உன் தோப்பனார் எங்கடி போவார்" என்றாள் ருக்கு

"இதபாருடி ருக்கு, இவள கட்டிகொடுத்துட்ட பின்னாடி, இவ்வளவு பெரிய ஆத்தக் கட்டிண்டு, நாம என்ன செய்ய போறோம்..."

"இத வித்து, இவ கல்யாணத்தை முடிச்சிட்டு மிச்சம் இருக்கறத வெச்சு ஒரு வாடகை ஆத்துல நம்ம காலத்த ஓட்டிட்டா போறது"

"சரிங்கோண்ணா, எதோ பாத்து செய்யுங்கோ" என்றாள் ருக்கு

"அப்பா, நான் தெளிவாதான் இருக்கேன், அவாள பாக்கறத்துக்கும் நல்ல மனுசாளாத்தான் தெரியறது..."

"அதுக்குமேல எதாவது ஒன்னுன்னா நானே பாத்துப்பேன், நான் ஒன்னும் நம்ப விஜிமாதிரி தலையாட்டிண்டு, எல்லாத்தையும் கேட்டுண்டு இருக்கமாட்டேன்" என்றாள் ரஞ்சனி

ரஞ்சனி இவ்வளவு தெளிவா பேசுகிறாளே என்று வியந்து வாயைப் பிளந்தேன்

"ரஞ்சனி எம் பொண்ணாக்கும் சமர்த்து..., நீ சொல்லறது சரின்னுதான் பட்றது, சாயங்காலமே, தரகர் மாமா கிட்ட பேசி, சம்மதன்னு சொல்லச் சொல்லிடுறேன்"

"அவா வரதட்சணையில பிடிவாதமா இருக்காளே, உன்னெ நன்னா பாத்துப்பாளான்னு. நேக்கு சந்தேகம் அதான் கொஞ்சம் யோசிச்சேன்" என்றாள் ருக்கு

"இப்ப இருக்கிற பெரியவாளைவிட சின்னவாவெள்ளாம் தெளிவாதான் இருக்கா... அவாளிடம் யோஜனை கேட்டால் தான் சரிவர்றது..."

"நல்லதா நடந்தா சரிண்ணா...பகவான் மேல பாரத்தைப் போட்டுற வேண்டியதுதான்"

"பகவான் இருக்கார் அவர் பாத்துப்பார்...இன்னிக்கு நம்மாத்து நரசூஸ் காஃபி பிரமாதம் ... இன்னும் ஒரு கப் கொண்டுவாடி ருக்கு.."

'அப்பாடா...' ஒருக்கிற ஒரே பெரிய பாரம் குறையப் போகிற திருப்தியில் நேக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

பின்குறிப்பு : கதையில் வரும் பாத்திரங்கள், வரதட்சனை, ஐயராத்து டயலாக் எல்லாம் கற்பனையே.

9 Comments:

said...

என்னண்ணா சொல்ல வர்றேள்...அவா ஆத்து பொண்ணுங்க அப்பா சொத்தை அழகா பிரிக்கிற அளவுக்கு புத்திசாலின்னா..?

said...

//TBCD said...
என்னண்ணா சொல்ல வர்றேள்...அவா ஆத்து பொண்ணுங்க அப்பா சொத்தை அழகா பிரிக்கிற அளவுக்கு புத்திசாலின்னா..?
//

அவ்வளோ பெரிய ஆத்தை கண்டிண்டு ரஞ்சனி தோப்பனார் என்ன செய்யப் போறார். விடுங்கோ பொண்ணுக்குத்தானே தர்றார்.

said...

எனக்கு ஒரு சந்தேகம் அது என்ன எல்லாரும் பெண் இருக்கிற அய்யர் ஆத்து கதையாவே எழுதரேள். ஆம்பல புள்ளையாள் இருக்கற ஆத்தை பத்தி கதை எழுதினா என்னவாம்.

said...

நன்னா கதை எழுதறேள் போங்கோ...
:)

said...

என்னவோய் இது?

கதை மாதிரி இல்லாம, ஒரு சம்பவம் மாதிரின்னா இருக்கு?

கதைன்னா ஒரு திருப்பம் வேணாமோ?

"அப்பாடா, எங்க நம்மள, ஒண்ணும் போடாம அனுப்பிடுவாரோன்னு பயந்துண்டு இருந்தேன். நல்ல வேளையா பேசி, வீடு வித்து நகை போட ஏற்பாடு பண்ணிட்டேன்" என்று வில்லியாக சிரித்தாள் ரம்யா ;)

said...

//"அப்பாடா, எங்க நம்மள, ஒண்ணும் போடாம அனுப்பிடுவாரோன்னு பயந்துண்டு இருந்தேன். நல்ல வேளையா பேசி, வீடு வித்து நகை போட ஏற்பாடு பண்ணிட்டேன்" என்று வில்லியாக சிரித்தாள் ரம்யா ;)//

சர்வேசன்,

கலக்கிட்டிங்க போங்க...இந்த யோசனை தெரிந்திருந்தால் கதையில் கடைசியில் சேர்த்திருக்கலாம்.

நல்லா இருக்கே...சபாஷ்.

கதைகளை படித்து படித்து முடிவுரை எழுத ஆரம்பிச்சிட்டேள். பாராட்டுக்கள் !

said...

ஊப்ஸ்! தப்பு பண்ணிட்டேன் வோய், ரம்யா இல்ல ரஞ்சனி.

ரம்யா வேற ஏதோ கதைல வருவாளாக்கும்.

said...

என்னமோ ப்ராமனா ஆத்துப் பொம்மனாட்டிங்கல்லாம் முழிச்சவா மாதிரியும் திராவிடா ஆத்துப் பொம்மனாட்டிங்கல்லாம் இழிச்சவா மாதிரில்ல இருக்கு கதை. என்னமோ போங்க. ப்ரமனா நின்னாலும் நோக்கு குத்தம், ப்ராமனா குனிஞ்சாலும் நோக்கு குத்தம்.

பத்திண்டு வர்றது நேக்கு.

எல்லாத்துக்கும் அந்தக் காலம் மாதிரி இருக்க முடியுமான்னா? காலத்துக்கு தகுந்த மாதிரி மாற வேண்டாமோ? பாருங்கோ நான் குடுமி வெச்சிருக்கேன். அமெரிக்கால சாப்டுவேர்ல உத்யோகம் பார்க்கும் என் பேரன் அதை வெச்சுக்கலை.

உடனே பூனூல் அது இதுன்னு கிளம்பிடாதேள். பகவான் சொல்லிருக்கார். நேக்கு நன்னா தெரியும். எதை எதை விடனுமோ அதை அதைத்தான் விட முடியும்.

நோக்கு கதை எழுத வேற ஜாதி பொம்பளையே கிடைக்கலியாடா அம்பி?

said...

//SurveySan said...
ஊப்ஸ்! தப்பு பண்ணிட்டேன் வோய், ரம்யா இல்ல ரஞ்சனி.

ரம்யா வேற ஏதோ கதைல வருவாளாக்கும்
//

SurveySan உங்க டீன் ஏஜ் கனவுல கூட வந்திருக்கலாம். யார் கண்டா ?
:)