Thursday, May 8, 2008

கத கேளு கத கேளு : பில்லா- லங்காவி -பினாங்க் கத கேளு :)

மே 2 3, 2008, லங்காவி, ஈகிள் பே விடுதி.

வழக்கமாக கிளம்ப தாமதம் செய்துக் கொண்டியிருக்கும் நான், மே2 ஆம் தேதி கோவியாரை
திகைக்க வைக்க எண்ணி, வெகு சீக்கிரமாக எழுந்து தயாராகிவிட்டேன். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இருவரும் பேசிக் கொண்டது 8.00 மணிக்கு விடுதியயை விட்டுக் கிளம்புவோம் என்பதே. நான் 7.30 மணிக்கு தயாராகி, கோவியார் அறையயை தட்டினால், தலைவர் எழுந்திருக்க கூட இல்லை. ஒரு சிறுவனுக்குரிய மகிழ்ச்சியுடன், அவரைக் கொஞ்சம் எள்ளி நகையாடிவிட்டு, உணவருந்துச் சென்றோம். பின், அறைக்கு திரும்பி, மீண்டும் ஒரு குட்டித் தூக்கம் போட்டேன்.

சற்று நேரம் கழித்து கோவியார், தயாராகி, உணவருந்திவிட்டு வந்தார். விடுதியில் அறையயை காலி செய்து விட்டு கிளம்பினோம்.பின்னர், அரும்பாடுபட்டு, அந்த பழைய வீரா காரைக் கிளப்பிக் கொண்டு வந்தேன். வண்டியயை எடுத்தவுடன் பார்த்தது, இரவு வேலை செய்த சமிக்ஞைக் காட்டும் கருவி வேலை செய்யவில்லை. சரி, லங்காவியின் வரைவும் தேவைப்பட்டதால்,படகு நிறுத்ததிற்குச் சென்று இரண்டையும் முடித்துவிடலாம் என்று சென்றோம். வாடகை வண்டிக்காரனை அழைத்தால், அவன் வந்து, வேறு வண்டிக் கொடுத்தால், எண்ணெய் (petrol) பணம் கொடுக்க மாட்டோம் என்றுச் சொல்லிவிட்டான். சரி,இதை சரி செய்ய முடியும்மா என்றால், திருப்பும் சக்கரத்தின் கீழ் கையயை விட்டு, ஒரு இழு இழுத்தான் சரியாகவிட்டது. சரி, என்று வரைவைப் பார்த்து, வண்டியயை ஓட்ட ஆரம்பித்தேன். கோவியார் நடத்துனராக முன்னே அமர வைத்தோம்.

தொங்கும் கம்பி வண்டிக்குப் (cable car) போவதாகத் தான் திட்டமிட்டுயிருந்தோம். வழியில் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருந்தன. அந்த இடத்திற்கு ஊருக்குள் நுழைந்தப் போவதென்றால், குழம்பிவிடுவோம் என்றூ தீவைச் சுற்றி செல்லும் பாதை, நெரிசல் இல்லாத பாதையயைத் தேர்தெடுத்தோம். ஒவ்வோரு சின்னமாக அடையாளம் கண்டுப்பிடித்து, நிதானமாக, அதே சமயம் திட்டமிட்ட நேரத்திற்குள் வந்து சேர்ந்தோம். தொ.கம்பி வண்டியயைப் பார்க்கும் போதே ஆயசமாக இருந்தது. அனுமதிச் சீட்டைப் பெற்ற வரிசையில் நின்றோம்.

வண்டி நகர்ந்துக் கொண்டியிருக்கும் போதே, வண்டியினுளீருந்து, பயணிகள் இறங்கி, நாம் ஏற வேண்டும். அதனால், கட்டம் போட்டு, ஒவ்வொருவருக்கும் இடம் ஒதுக்கி, சீரான வேகத்தில் நகரும் வண்டியினுள் ஏற வைக்கப்படுகிறார்கள். முண்டியடிக்காமல், பொறுமையாக அனைவரும் ஏறியதைக் குறிப்பிட வேண்டும். கம்பி வண்டி மேல் நோக்கி நகர்ந்தது. மேலிருந்து கீழ் நோக்கி பார்த்தால் லங்காவியின் ஒரு பகுதி தெரிந்தது. இந்த தொ.கம்பி வண்டி கடற்கரையோரம் இருக்கும் ஒரு மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.

(தொங்கும் கம்பி வண்டி மேலிருந்து கீழ் )

ஒரிடத்தில் கம்பி செங்குத்தாக ஏறுவதைப் பார்த்து, அந்த இடத்தில் நமக்கு மிகவும் திகிலாக இருக்கும் என்று பேசிக் கொண்டே ஏறினோம். ஆனால் நாங்கள் நினைத்ததுப் போல் அல்லாமல், கம்பி செங்குத்தாகச் சென்றாலும், வண்டி, நேராகவே நகரும் வண்ணம்,வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது, அந்த இடத்தைக் கடக்கும் போது புரிந்தது.
(கம்பி வண்டி திரும்பும் இடம். மேலே தெரிவது தான் பார்வையாளர்கள் தளம். இடப்புறம் கீழே தெரிவது, அந்த தொங்கு பாலத்தின் ஆரம்பம். அந்த திரும்பும் இடத்திலிருந்து பாலத்திற்கு இறங்கிச் செல்ல வேண்டும் )

முதலில் 652.5 மீட்டர் உயரத்தில் இறங்கி, அங்கேச் சென்று, பார்வையாளர்கள் தளத்தில் நின்று பார்த்தோம். அங்கிருந்து பார்த்தால், பில்லா (அஜித்) ஒரு தொங்கு பாலத்திலிருந்து கிழே சர்ரென்று இறங்குவாரே, அந்த பாலம் தென்பட்டது.
( பில்லா பாலம் !!! காற்று அதிகம் அடித்தால் பாலம் அசையும்..அசைந்தப் போது ஆடிப்போய் விட்டோம்..)
தொங்கு பாலங்கள் ஓரளவிற்கு நேராக இருக்கும். இந்த பாலத்தைக் கட்டியவர்கள் ஏனோ, அதை ஒரு அரை வட்டம் போல் வைத்திருந்தார்கள். அதுவும் கீழிலே பிடிமானம் எதுவும் இல்லை, பாலம் கம்பிகளால் தொங்கவிடப்பட்டியிருந்தது.

(இந்த படியில் தான் அஜித் சர்ரென்று இறங்குவார்...கம்பிக்கு வெளியே கை நீட்டி, மாறுப்பட்ட கோணத்தில் எடுத்தேன்... :P )

பார்வையாளர்கள் தளத்திலிருந்து, கீழே சற்று தூரம் முரட்டுப் படிகளில் இறங்கி சென்றோம். அந்தப் பாலத்தை அருகே சென்று பாதளத்துடன் பார்த்தால் கொஞ்சம் உதறலாகத் தான் இருந்தது. அஜித் டூப் போடாமல் அங்கே சாகசம் செய்திருப்பாரா என்று சந்தேகமும் வந்தது. யார் அதை செய்திருந்தாலும் அது உண்மையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செய்யும் செயல் தான்.

சில, பல நிழற்படங்களை அள்ளிக் கொண்டு, பின், அந்த முரட்டுப் படிகளில் ஏறி, மலையுச்சியில் இருக்கும் பார்வையாளர்கள் தளத்திற்கு வண்டியில் ஏறினோம்.
(மலை, தீவு, திவுக்குள் மலை, மலையே தீவு, குட்டித் தீவு என்று தாவு தீரும் காட்சிகள்.. :)))) )

அந்த இடத்தில் இருந்துப் பார்த்தால், கடற்கரை, மலை, தீவுகள், பாதாளம் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு காட்சி. நிழற்படங்களில் பார்த்தாலும், அதை முழுமையாக அங்கே சென்றுப் பார்த்தால் தான் அனுபவிக்க முடியும்.

(கோவியார் எடுத்தப் படம்..விமர்சனங்கள் வரவேற்கப்படமாட்டாது )

சம்பிரதாய படப்பிடிப்பு வேலைகள் அங்கேயும் நடைப்பெற்றது. சற்று நேரம் கால் நீட்டி, ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அந்த தளத்தின் உச்சியில் இருக்கும் தளத்திற்குச் சென்றோம் (இரண்டு அடுக்குகளாக கட்டியிருக்கிறார்கள்). அங்கே சற்று நேரம் செலவழித்தப் பின் மற்றொரு பார்வையாளர் தளத்திற்குச் சென்றோம்.

அதன் பின், சற்று சிற்றுண்டிகள் அருந்திவிட்டு, கீழே போகும் வண்டிக்கு ஆயுத்தமானோம். வண்டி கீழே இறங்கும் போது திகிலாகவே இருந்தது. கோவியார் பயந்ததாலோ என்னவோ, வண்டியயை ஆட்ட முயற்சிப்பதுப் போல் நடித்துக் கொண்டே வந்தார். மேலிருந்து கீழ் நோக்கி வருகையில் சில மான்கள் தென்பட்டது. வனவிலங்கு பூங்கா ஒன்றும் இருப்பது தெரிந்தது. கீழியிருந்து மேலே சென்று வருவதற்குள் 3 மணி நேரம் ஆகிவிட்டது. உணவருந்தும் நேரம் வேறு கடந்துவிட்டது. எங்கள் படகு கிளம்பும் நேரத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும் என்றால், வேற இடத்திற்குச் செல்ல முடியாது என்பதால் நேரே உணவு விடுதிக்கு வண்டியயை விட்டோம். நேற்று உணவருந்திய இடமென்றால் பரவாயில்லை என்று ஒருப் புறம் நினைத்தாலும், சாப்பிட ஏதாவது கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு அனைவரும் வந்துவிட்ட நேரத்தில், சரியாக அதே உணவு விடுதியயைக் கண்டுப்பிடித்து, உணவருந்தினோம். பின்னர் அருகேயிருந்த பேரங்காடியில் மிட்டாய்கள் கொள்வனவு செய்துவிட்டு, படகுத்துறைக்கு கிளம்பினோம்.

படகுத்துறையில் வண்டியயை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு, கழுகு சிலையுடன் சில நிழற்படங்கள் எடுத்துவிட்டு, சுங்க சோதனையயைக் கடந்து, காத்திருப்பு அறைக்கு வந்தோம். 5.00 மணிக்கு படகில் ஏற அனுமதிக்கப்பட்டவுடன், வரிசையில் நின்று ஏறினோம். வரும் போது, கீழ் தளத்தில் ஆட்டம் அதிகமாக இருந்ததால், சிலர் வாந்தி எடுக்க நேரிட்டது. அதனால், இம்முறை மேல் தளத்தில் சென்று விடுவோம் என்று முதல் தர அறை பக்கம் படக்கென்று ஏறிவிட்டோம். சில பல தகிடுதத்தனம் செய்து முதல் தர அறையிலே இடம் பிடித்தோம். படகு போக ஆரம்பித்த பத்து, இருபது நிமிடத்திலேயே, பார்வையாளர்கள் முகப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர்.சூரியன் தரையிறங்கும் காட்சியயைக் காண மக்கள் குவிந்த வண்ணமே இருந்தனர்.

( தலைகள் இல்லாமல் படம் எடுப்பது ரொம்ப கடினமாக இருந்தது..சூரியன் கீழே இறங்க ஆயுத்தமாகிவிட்டார்)
வண்டியில் ஏகப்பட்ட அரபியர்கள் தென்பட்டனர். மலேசியவிற்கு நிறைய சுற்றுலா பயணிகள் அரபு தேசத்திலிருந்து வருவதாக புள்ளியிலும் சொன்னது நினைவுக்கு வந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலே ஒரு சூடான் குழு இளைஞர்கள், இளைஞிகள் பாடல் பாடியபடி, வந்தார்கள்.

(சூடான் இளைஞர்கள். பின்னாலிருப்பது சூடானிய இளைஞி )
அவர்களைக் கண்டால், ஏதோ தெற்கே நம்மவர்களைக் கண்டதுப் போல் எனக்குத் தோன்றியது. உருவமைப்பில் திராவிடர்களுக்கு அருகே வந்ததுப் போல் தோன்றியது.

சூரியன் மறைய மறைய கை தன்னாலே, படம் எடுத்துத் தள்ளியது.
(மொக்கை முயற்சி என்று கூவுபவர்கள்...வாழ்க...)
நிச்சயம்,புகைப்பட ஆர்வலர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சந்தர்பம் கிடைக்குமேயானால், இதை விட நல்ல தரமான படங்கள் வந்திருக்கும் என்பது திண்ணம். என்னிடம் இருந்த எண்சமிக்ஞை (digital) நிழற்படக்கருவியில் கிடைத்த மட்டும் சுருட்டினேன்.

(சில்ஹவுட் முயற்சி...படத்தில் இருப்பது நானே தான்...)
சுமார், 8.30 மணியளவில் பினாங்க் வந்தடைந்தோம். பின்னர், வாடகை ஊர்தி அமர்த்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். குழந்தைக்கு உணவுக் கொடுத்துவிட்டு, குருவி படத்திற்குச் செல்வதென்று ஏற்கனவே முடிவு கட்டியிருந்தப்படியால், வெளியே உணவு உண்டுவிட்டு, திரையரங்கிற்குச் சென்றோம். படம் போட 1 மணி நேரம் ஆகும் என்று தெரிந்தவுடன், அருகே இருந்த பணி பந்து உருட்டி விளையாடுமிடம் சென்று ஒரு ஆட்டம் ஆடி முடித்தோம்

கோவியார், நான், கோவியார் மகள் விளையாடியதில், நான் தான் வென்றேன் என்று இங்கே தன்னடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன். என்னால் ஒரு முறைக் கூட பத்து புட்டிகளை வீழ்த்த முடியவில்லை. அதனால் என்ன, நானியிருக்கிறேன் என்று, எங்கள் அனைவரையும் ஒரே அடியில் குருவி வீழ்த்தினார், படம் பார்க்கும் பொழுது. நள்ளிரவு தொடங்கி , அதிகாலை வரை குருவியின் கொத்துப்புரோட்டாவில் சிக்கி சின்னா பின்னமாகி, தூங்கச் சென்றோம். மே3, காலை சிற்றுண்டியயை முடித்துவிட்டு, பேருந்து நிலையத்தில் கோவியாரை வழியணுப்பிவிட்டு, மீண்டும் ஒரு குட்டித் தூக்கத்துடன் பயணம் நிறைவு பெற்றது.

தொடர்புடைய பதிவுகள் :
பினாங்கில் பெண்டேரா மலைக்குப் போனது ( டிபிசிடி, கோவி) , பினாங்கிலிருந்து லங்காவிற்கு சென்றது.



என் பதிவில் ஓடைப் பிரச்சனையால் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. அது சரியாகும் வரை, இந்த வீட்டில் வண்டியோட்டலாம் என்று நினைக்கிறேன். :))

6 Comments:

said...

/பணி பந்து உருட்டி விளையாடுமிடம்/

snow bowlingஆ.? பனி பந்தா இல்லை பணி பந்தா.?

said...

//சில்ஹவுட் முயற்சி...படத்தில் இருப்பது நானே தான்//

ஜோக் அடிக்காதிங்க சார்... அந்த ஆளத்தான் போலிஸ் தேடிகிட்டு இருக்கு... நீங்கனு சொல்லி மாட்டிக்காதிங்க...

said...

//
(கோவியார் எடுத்தப் படம்..விமர்சனங்கள் வரவேற்கப்படமாட்டாது )
//
கோவியார் எடுத்த படம் ரெம்ப நல்லா இருக்கு...
(இப்படி சொன்னா என் அக்கவுண்ட்டுக்கு ஒரு 1000 வெள்ளி அனுப்புறதா சொல்லீருக்கார் கோவி அண்ணன்... இதே மாதிரி யார் பின்னூட்டம் போட்டாலும் அவங்களுக்கும் அனுப்புவார்... அப்படியே பின்னூட்டம் போடுறவங்க இன்னும் 2 பேரை சேர்த்து விடனும்..)
:P

said...

\\கோவியார் எடுத்தப் படம்..விமர்சனங்கள் வரவேற்கப்படமாட்டாது )\\\

ரொம்ப நல்லா இருக்கு...;)

(என் அக்கவுண்ட் நம்பர் 010041555)

said...

தலை நீங்கள் எங்களுக்கு ஊரையே முழுசா சுத்தி காட்டிட்டீங்க ,அசத்துங்க

said...

விளக்கமும் படங்களும் அருமை.